Sunday, February 21, 2016

முன்பெல்லாம் இசையைத் தான் பிரசவித்தாய்
பலவற்றையும் பகிர்ந்திருக்கிறேன்-
எல்லாவற்றுக்கும் இசை தான் உன் பதில்.
என் மகிழ்ச்சியைக்  கொண்டாட
என்னை கவலையிலிருந்து மீட்டெடுக்க
என்னை உரிமையுடன்  கோபித்துகொள்ளவென.
இப்பொழுதும் அதே இசையைத் தருவதாக  நீ நம்புகிறாய்
உண்மையில் - நான்
இரைச்சலாக உணர்கிறேன்
பேரிரைச்சலாக  உணர்கிறேன்
தயவுசெய்து-
சுனாமியென புறப்பட்டு எனை சுருட்டிக்கொள்
கூடுதலாக மனப்பிறழ்வை ஏற்படுத்தாதே.

Thursday, January 8, 2015

பச்சைத் தாவரங்கள்
பச்சிளங் குழந்தைகள்
பாசமான மனிதர்கள் விட்டு
பணத்தைத் தேடி-இந்த
பாலைவனத்தில்...
வாழ்க்கை
தொலைக்கப்பட்டதா?
துவங்கப்போகிறதா?
என்னுள் ஈராயிரம் கேள்விகள்
எதுகை- மோனையோடு..
"நீ
நான்
நிழல்
நிலவொளி
நதிக்கரை"
விடிவதற்குள் உருவாகும்-
ஓர் ஆகச்சிறந்த கவிதை...
நெருப்பைக் கண்டறிந்தது முதல் 
நேற்றைய அணுக்கரு பிளவு வரை 
நாகரீகம் ஏந்தியதால்
நாசமாகிறது பூமி.
நாளைய சந்ததிகளுக்கு- 
எய்ட்சும்
எபோலாவும்
ஏனைய வைரஸ்களும் விட்டுச் செல்வோம்.
இப்புவி வெற்றிடமாகும் ஓர்நாள்- அன்று
இறைவனும் தண்டிக்கப்படுவான்.
மனிதனைப் படைத்த குற்றத்திற்காக...
எதை எழுதிடப்போகிறோம் என்ற ஏக்கம்
எதை எழுதிடக்கூடாது என்ற தயக்கம்
எந்த கருவும் கிடைக்கப்பெறாத ஒரு வெறுமை
எல்லாம் மாயையெனும் ஓர் தெளிவு
புரிந்து கொள்ள முடியாததும்
பயிற்றுவிக்க இயலாததுமான வாழ்க்கையில்
பணத்திற்காக நடக்கிறேன்
பணத்திற்காகவே நடிக்கிறேன்.